Tuesday, April 27, 2010

பழங்குடியினர்: சில கேள்விகள்?

பழங்குடியினரை மேம்படுத்தவேண்டும் என்பதில் இரண்டு கருத்து இல்லை.

ஆனால், அது சார்ந்த சில வினாக்களுக்கு பதில்களில் ஒருமித்த கருத்து இல்லை:
அவை:
௧. காடுகளில் சாலைகள் அமைக்காமல், பிற கட்டுமான வசதிகளை உண்டாக்காமல், அவர்களுக்கு விஞ்ஞானத்தின் வசதிகளை எவ்வாறு செய்ய முடியும்? அவர்களுக்கு சுகாதார மனைகள், தொலைபேசி, தொலை காட்சி, வேண்டுமாவேண்டாமா?
௨. சாலைகள் போடுவதற்கு, பழங்குடியினர் அல்லாதவர்கள் அங்கு வர வேண்டும்; தங்க வேண்டும்; பின், தம் இடத்திலேயே தாம் அன்னியர்கள் ஆகி விட்டதாக புகார் செய்யாமல்இருப்பாரா?
௩. அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டுமா இல்லையா? ஆம் என்றால் எந்த அளவுக்கு? அவர்களுக்கு "நவீன கல்வி" அளித்தால், அவர்களை இயற்கையை ஒட்டிய அவர்தம் வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, நகர வாழ்க்கை முறைக்கு மாற மூளை சலவை செய்வதாகஆகாதா?
௪. சரி, அவர்களுக்கு கல்வி அளிக்கவே வேண்டாம் என்றால், அவர்களுக்கு, அரசியல் சட்டத்திலே அளிக்கப் பட்ட ஒதுக்கீடு முறையின் பலன்கள் எவ்வாறுகிடைக்கும்?
௫. நவீன கல்வி இல்லாமல், அவர்கள் இவ்வாறே காலம் காலமாக இருப்பார் என்றால், அதிலும் சில பிரச்னைகள் உண்டு: அவர்களின் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு சரியான வாழ்வு ஆதாரங்கள் அங்கேயே - அந்த காட்டு பகுதியிலேயே - தொடர்ந்து கிடைக்குமா? (உதாரணத்துக்கு, தேன், கிழங்குகள், கொட்டைகள், தோலுக்கு வேண்டிய விலங்குகள்) ,
மேலும், அவர்கள், சிறு கூட்டத்தில் உள்ளேயே திருமணம் செய்து இனத்தை பெருக்கினால், consanginous திருமணங்களால் பிறக்கும் குழந்தைகள் பிணியுடனும், ஊனங்களுடனும் பிறக்கும். . நீண்ட கால நன்மைக்காக அவர்கள், காலப்போக்கில் பொது சமுதாயத்துடன் ஒன்றிப் போவது தான் நலம் பயக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்லுவது சரியா?

௬. அவர்களை அங்கேயே இருக்க விட்டால், அவர்கள் வாழும் வனத்தில், நிலத்துக்கு அடியில் உள்ள கனிம வளங்கள் - கலப்பைக்கும், வண்டி சக்கரத்துக்கும் தேவையான இரும்பு, சாதம் பரிமாறும் கரண்டி செய்ய அலுமினியம், நாட்டுக்கு, ஏன், அவர்கள் தெருவுக்கு போட வேண்டிய விளக்குக்கான மின்சாரம் உற்பத்தி செய்ய கரி - முதலியவை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சரியா?
௭. சுதந்திரம் பெற்றதற்கு பின் சிற்சில பழங்குடியினர் கல்வியில் தேறி உள்ளனர்; ஒதுக்கீடு முறையிலோ, அல்லது இல்லாமலோ, பட்டதாரிகள், அதிகாரிகள் , பொறியாளர்கள், மருத்துவர்கள் ஆகி உள்ளனர்; வக்கீல்கள் உள்ளனர்; அவர்கள், தம் இனத்து பழங்குடியினர் வருங்காலத்தில் எவ்வாறு முன்னேற வேண்டும் என ஏதேனும் கருத்து வைத்திருக்கிறார்களா? அர்ஜுன் முண்டாவும், சிபு சொரேனும், தம் பழங்குடி இனத்தை எவ்வாறு முன்னேற்ற பாதைக்கு கூட்டி செல்ல விழைகிறார்கள்?
௮. இது போல எல்லா மாநிலங்களிலும், சட்ட சபைக்கு பழங்குடியினருக்கான ஒதுக்கீடு உள்ளது; ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் அமைச்சரவையில் பங்கு பெறுகிறார்கள். அவர்கள் தம்வாக்கு வங்கியை பாது காத்து கொள்ளும் அளவுக்கு, அவர்கள் வருங்காலம் பற்றிய எதாவது திட்டங்களை முன் மொழிகிறார்களா?

இவை எலாம், ஏதோ பழங்குடியினரை மடக்க வேண்டும் என்று எழுப்பும் வினாக்கள் இல்லை; இவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அவர்கள் முன்னேற்றத்தில் நம் பங்கு ஆற்ற வேண்டும் என எண்ணும் ஒவ்வொரு இந்தியன் மனதில் எழும்வினாக்களே.

உங்களைப் போன்ற வலையுலக அன்பர்கள் கருத்து கூறுங்கள்; பல நூறு கருத்துகள் வந்தால் அவற்றில் சில நூறு செயல் படுத்த முடியும்.
இதை படிக்கும் ஒவ்வொரு அன்பரும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

Wednesday, April 21, 2010

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:

நாம் மறந்த இந்தியர் : பழங்குடியினர்:

(பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாழிதழில் 15/4/2010 வந்த Nitin Desai என்பவரின் கட்டுரையில் ஒரு பகுதியின் தமிழாக்கம்;
செய்தி தாள்களிலே, வலைப் பதிவுகளில் ஈழம், தலித், பார்பனீயம், வாழும் வள்ளுவர், நித்ய ஆனந்த லீலைகள் போன்ற தலைப்புக்களுக்கு வழங்குவதில் பத்தில் ஒரு பங்கு கூட நாம் பழங்குடியினர் பிரச்னைகளுக்கு வழங்குவது இல்லை எனத்தோன்றியதால் இந்த பதிவு .)

தண்ட காரண்யத்தில் கிட்டத்தட்ட நம் மக்களின் மீதே அரசு போர் தொடுக்கிறது.
கிழக்கில் பீகார்/மேற்கு வங்கம் முதல் தெற்கே கர்நாடகா/ தெலங்கானா வரை பகுதி தான் கவலைக்கு காரணம். ; ஆனால், மக்களின் (காட்டு வாசிகளின் ) துணையும், பாதுகாப்பும் இருப்பதால் துரத்தும் காவல் துறையிடம் மோத மாவோயிஸ்டுகளுக்கு ஒரு தளம் ஆகிறது. ஆகவே, நாம் களைய வேண்டியது இந்த பழங்குடியினரின் துயரங்களைத்தான்.

பழங்குடியினரிடையேயும் பிற இந்தியர்க்கும் உள்ள வளர்ச்சி நிலையில் உள்ள வேறுபாடு:இதன் மூலம் தெளிவாகும்: :
வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்

பழங்குடியினரிடையே S T 47 %
தலித்துளில் S C 37 %
பிற பின்தங்கிய இனத்தவர் OBC 26%
மற்றவர் 16%

தலித்துகளும் பின்தங்கிய வகுப்பினரும் (ஓரளவு ) தேசிய அளவிலும் , மாநில அளவிலும் அரசியல் சக்தி பெற்றுள்ளனர். பழங்குடியினர் கூட்டணி அரசியலிலே ஓரத்திலேயே உள்ளனர். (ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா கூட்டணிகளும் பழங்குடியினர் தலைமை தாங்கிய, மற்றும் பெருவாரியாக இருந்த அரசுகள் தான்: இதற்கு விதி விலக்கு; அதை ஆராய போனால், முக்கிய விஷயம் விட்டு போய் விடும்.)

இது இன்று நேற்று வந்த நிலை அல்ல: அரசியல் சட்டம் எழுதப்படும் போதும் கிட்டத்தட்ட பழங்குடியினர் மறக்கப் பட்டனர்; சரியான சமயத்தில், சரியான விதத்தில் பேசி இட ஒதுக்கீடு கிடைக்க செய்தவர் ஜெயபால் முண்டா.. ஆனால், அதன் பின் அவர்களை மறந்து விட்டோம். இப்போதாவது மீண்டும் நினைப்போம். இதற்கு பொருள், சில கோடிகளை விட்டெறிவோம் என்பதல்ல. தலை முறை தலை முறையாக வந்த பழங்குடியினரின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கும், ஆட்சியில் , பொருளாதாரத்தில் சக்தி வழங்குவதே நாம் செய்ய வேண்டியது.

கிழக்கிலும், மத்தியிலும் தெற்கிலும் இந்த ஆதிவாசிகளின் உறைவிடம் தான் கனிம, வன வளங்கள் நிறைந்ததாய் இருப்பது பிரச்னையை சிக்கலாக்குகிறது பெருமளவு நிலம் கையகப் படுத்தப் பட்டு, வேறு இனத்தவர் குடியேறுவது, சுரங்க மாபியாக்கள், ஊழல் அரசு அதிகாரிகள், வன வளங்கள் மேல் வைத்திருக்கும் கட்டுப்பாடு, இவற்றால், பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்திலேயே அன்னியர் ஆக்கி விட்டது.

ஒரு நல்ல காரியம் 2006 ல் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம். ஆனால் அது நடை முறைப் படுத்துவதிலும் தடைகள்; ஓட்டைகள். . இந்த ஆண்டு பிப்ரவரி வரை வந்த உரிமை கோரும் விண்ணப்பங்கள்: 27 லட்சம்; . ஒப்புக் கொள்ளப் பட்டவை : 7.60 லட்சம் ; நிராகரிப்பட்டவை : 9.30 லட்சம் ;; முடிவு எடுக்காமல் நிலுவையில் உள்ளவை : 10.10 லட்சம். சமூக உரிமைகளுக்கு சட்ட உருவம் கொடுப்பதிலும், கூட்டு மேலாண்மை நிறுவுவதிலும் நடை முறை சிக்கல்கள் உள்ளன.

அவர்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களின் மேல் அவர்களுக்கு உள்ள உரிமையை நாம் அங்கீகரிக்கவில்லை; மேம்பாடு, முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது, ஈட்டுத் தொகை வழங்குகிறோம்; ஆனால், அங்கு கிடைக்கும் பொருள்களின் விலையில் அவர்களுக்கு பங்கு கிடைப்பது இல்லை;! ( மாபியாக்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் பின் வழியாக பங்கு போய் விடுகிறது என்பது உண்மை நிலை).
தலைமுறை தலைமுறையாக ஓரிடத்தில் இருக்கும் பழங்குடியினை இடம் பெயர்த்துவதில் ஏதோ ஒரு குறை உள்ளது அல்லவா? அவர்களை அத்து மீறி குடிசை போட்ட சேரியினரைப் போல நடத்துகிறோம். அமெரிக்காவில் வெள்ளையர்கள் அமெரிக்க நிலத்தில் காலம் காலமாக இருந்து வந்த பழங்குடியினருக்கு உரிமை மறுத்து, அவர்களின் வனங்களை கையகப்படுத்தினர் என்று சரித்திரம் சொல்லும்.

இந்தியாவில் உள்ள ஆதிவாசியினர் பல தலைமுறைகளாக கோலோச்சியவர்கள்; அவர்களில் சிற்றசர்கள் இருந்தனர்; அவர்கள் வெள்ளையரை எதிர்த்து கலகம் செய்தது வரலாறு: உதாரணம்: சாந்தாளர்கள்; மற்றும் அல்லூரி சீதா ராம ராஜூ. முதலியானோர். அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்களே அரசு செய்யும் ஒரு முறை இயற்ற/ஏற்க வேண்டும்.
ஆதிவாசிகள் இந்து சமுதாயத்தில் ஒதுக்கப் பட்டு வசித்த தலித்துக்கள் அல்லர்; அவர்கள் இந்து சமுதாயத்துக்கு வெளியில் இருந்தவர்; சாதி இந்துகளுக்கு சமமாக நடத்தப்பட்டவர்கள்; புராணக் கதைகளில் இதற்கு, பல ஆதாரங்கள் உண்டு; உதாரணமாக, வால்மீகி ஒரு பழங்குடியினர் . ; இராமாயண காதையில் வரும் சபரி ஒரு ஆதிவாசி; மகா பாரத்தில் ஏகலைவன். (அல்லி கூட அப்படித்தான் என நினைக்கிறேன்).

பழங்குடியினருக்கு மானியம் வேண்டாம்; அவர்களுக்கு தர வேண்டியது அவர்களுக்கு உரித்தான சமூக அந்தஸ்தும், உரிமைகளும்;

Monday, April 12, 2010

யாதும் ஊரே யாவரும் கேளிர் : கணியன் பூங்குன்றனார்

www.ponnusamypalani.blogspot.com/2010/04/blog-post
" தண்டகாரண்யம்: இந்திய தேசியம் பேசினால் செருப்பால் அடிப்பேண்டா"
என்ற பதிவு கண்டு நான் அனுப்பிய பின்னூட்டம்:

பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் ஒரு சேர ஒழிந்துவிடும் என்பதால் தண்டகாரண்யத்தில் கனிம சுரங்கங்கள் கூடாது என்பது புரிகிறது. ஒரு கோணத்தில் நியாயமும் கூட.
ஆனால், இந்த பிரச்னையில் இன்னொரு கோணம் உள்ளது. (வெளி நாட்டு சுரண்டல் பற்றி நான் கூறவில்லை).
இரும்பு, தங்கம், வெள்ளி, தாமிரம், கந்தகம், போன்ற கனிமங்கள் நிலத்திற்கு அடியில் இருந்து, சுரங்கம் அமைத்து, எடுத்து, பல்வேறு முறைகளில் பயன் படுத்துவது பல நூறு, அல்ல ஆயிரம் ஆண்டுகளாக வருகின்ற நடைமுறையே. இது போல் நடந்த கால கட்டங்களில் அந்த பழங்குடியினர் ஒன்று குடி பெயர்ந்து வேறு காடுகளில் குடியேறி இருக்க வேண்டும்; அல்லது, பொது சமுதாயத்தில் கலந்திருக்க வேண்டும். (நம் முன்னோர் அவ்வாறே வந்தவர்களாக இருக்கலாம்.)
சரியோ தவறோ, உலகம் முழுதும் "நவீன வாழ்வு " முறை வந்து விட்டது. கனிமங்கள் இருக்கும் போது, அதை பயன் படுத்தவே எந்த ஒரு அரசும் எத்தனிக்கும். (இதில் பன்னாட்டு நிறுவனகள் இல்லாவிடினும், இது நடந்தே தீரும்.)
ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு கனிம வளங்கள் உள்ளன: சிலியில் கந்தகம், மைய கிழக்கு நாடுகளில் எண்ணெய், தென் ஆப்ரிக்காவில் தங்கம், வைரம், என உள்ளது நாம் அறிந்ததே; அங்கும் வனப் பகுதியில் சிறிது காலத்திற்கு முன்போ, அல்லது நீண்ட காலத்திற்கு முன்போ, வனமும், பழங்குடிகளும் இருந்திருக்க வேண்டும். ( எனக்கு உலக சரித்திரம் பெரிய அளவுக்கு தெரியாது; இது தவறு என்றால் சரியான நிலை கூறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்).
தண்டகாரண்யத்தில் வசிக்காத "பிற" "இந்தியர்கள்" கனிம வளங்களை பயன் படுத்தாமல் தொழில் வளர்ச்சி பாதிப்பு, பிற நாடுகளிலுருந்து இறக்குமதி, அந்நிய செலாவணி என்று ரீல் விடுவார்கள்.
இதனால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை, பழங்குடியினருக்கு மிகவும் பாதிப்பு இல்லாமல், சுரங்கம் அமைத்தல்; அல்லது, அவர்களை குடி பெயர்த்து, சரியான வாழ்வு முறைக்கு வழி வகுத்தல் என்று சரியாக திட்டம் தீட்டி, அருந்ததி ராய், மேதா பாடகர் முதலிய பொது நல விரும்பிகளின் அங்கீகாரத்துடன் பணி மேற்கொள்வது சரியாக இருக்கலாம்.